search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய ஆலை"

    • உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை குளத்துப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலை உள்ளது. இங்கு பனியன் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி .
    • இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் முதுகெலும்பாக விளங்கும் சாயத்தொழில் இன்று எதிர்கொள்ள முடியாத சவால்களையும், நெருக்கடி களையும் சந்தித்துள்ளது. நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருப்பூரில் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை பின்பற்றி சாயக்கழிவால் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சுத்திகரிப்பு செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

    சர்வதேச நாடுகளின் இன்றைய எதிர்பார்ப்பு, பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி . அவ்வகையில் திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.தற்போது திருப்பூரில் 420 உறுப்பினர்களும், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 60 தனியார் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துக்காக மாபெரும் இயக்க செலவை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

    சாய ஆலைகளின் மாதாந்திர மின் கட்டணம் ஒரு லட்சமாக இருந்தது 1.60 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம், கேட்பு கட்டணம், பீக் ஹவர் கட்டணம் என 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மட்டும் மாதம் 30 கோடி ரூபாய் மின் செலவு ஏற்படுகிறது.

    பனியன் ஏற்றுமதி ஓராண்டாக குறைந்து போனதால் உற்பத்தியை 40 சதவீதமாக குறைத்துக்கொண்டு செலவை சமாளிக்க முடியாமல் சாய ஆலைகள் தடுமாறி வருகின்றன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பசுமை சார் உற்பத்தியை செய்து வரும் சாய ஆலைகளுக்கு பசுமை சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.மின் கட்டண செலவு மாபெரும் சவாலாக மாறியுள்ளதால் இனி வரும் நாட்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (சோலார்) மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தால் திருப்பூர் பகுதியில் நொய்யல் புத்துயிர் பெற்றுள்ளது. மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.

    எளிய முறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற்று சோலார் கட்டமைப்பை நிறுவ மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி உதவ வேண்டும். சோலார் அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் சரிவர இயங்காமல் இருப்பதால் சாய ஆலைகளும் ஸ்தம்பித்து போயுள்ளன. சவால்நிறைந்த சாய ஆலைத்தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்கட்டண செலவு அதிகரித்துள்ளதால் சோலார் மின் உற்பத்திக்கு மாற அரசு உதவ வேண்டும். உற்பத்தி செலவில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்கே செலவாகிறது.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் முருகசாமி கூறுகையில், 1,500 கோடி ரூபாய் செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளோம். ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் வரை செலவு செய்து, சுத்திகரிப்பு செய்து வருகிறோம். வெளிமாவட்டங்களில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கழிவுநீரை காவிரியில் விடுகின்றனர்.

    ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சிரமத்துடன் செயல்படுத்தும் திருப்பூர் சாய ஆலைகளுக்கு பசுமை சான்றிதழ் (கிரீன் டேக்) வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.

    • சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல சாய தொழிற்சாலைகள் உள்ளது.

    இந்தநிலையில் புதிதாக சாய தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக அந்தப் பகுதிமக்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது, சாயத்தொழிற்சாலை அமைப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நகர பகுதிகளில் குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை அருகில் செல்லும் சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் திறந்து விடுகின்றனர்.

    இதை ஆய்வு செய்ய மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார், பறக்கும்படை பொறியாளர் பழனிசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா உட்பட அதிகாரிகள் குழுவினர், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விதிமீறல் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் சாமுண்டிபுரத்தில் அருகருகே இயங்கிய இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. டேபிள் பிரின்டிங் எந்திரங்களை நிறுவியுள்ள இந்நிறுவனங்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை.சுத்திகரிக்காத பிரின்டிங் கழிவுநீரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டுள்ளன.அதேபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய சாய ஆலையும் பிடிபட்டது. எந்த அனுமதியும் பெறாத இந்த ஆலை 5 கிலோ கொள்ளளவுள்ள விஞ்ச் எந்திரத்தை நிறுவி, துணிக்கு சாயமேற்றியதோடு சாயக்கழிவுநீரை விதிமீறி வெளியே திறந்துவிட்டதும் தெரியவந்தது.

    அனுமதி பெறாமல் இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 2 பிரின்டிங், ஒரு சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்க மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவரான கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

    • சாய ஆலைகளுக்கு போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது.
    • 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

    திருப்பூர் :

    மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும் சாயத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்

    • சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது.
    • மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூரில் இயங்கும் சில சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்துவிடுவது மட்டுமின்றி, சாம்பல் கழிவுகளை நீர் நிலை ஓரங்களில் கொட்டியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.முருகம்பாளையம் சுற்றுப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் சாய ஆலைகள் இயங்குகின்றன.

    சாய ஆலைகளில் பாய்லரை சூடேற்றுவதற்கு, எரிபொருளாக விறகு பயன்படுத்தப்படுகிறது. விறகு எரித்த சாம்பல் கழிவுகளை சாய ஆலைகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை.முருகம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜம்மனை ஓடையின் குறுக்கே பாலம் உள்ளது. இப்பகுதியில் சாம்பல் கழிவுகளை கொட்டிவந்தனர்.போராட்டத்தையடுத்து தற்போது, எதிர்புறமுள்ள நிலத்தில் சாம்பல் கழிவுகளை கொட்டிவருகின்றனர்.

    சாக்கு பைகளில் அடைத்து கொண்டுவந்து தினமும் சாம்பலை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில், சாம்பல் மலை உருவாகிவருகிறது. ஜம்மனை நீரும், காற்றும் மாசுபடுகிறது.

    எனவே மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனைத்து சாய ஆலைகளிலும் ஆய்வு நடத்தவேண்டும். சாம்பல் கழிவுகள், திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா என ஆவணங்களை தணிக்கை செய்யவேண்டும். விதிமீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #Tirupur #ToxicGas
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



    அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupur #ToxicGas
    ×